இந்தியா

சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா?

Published

on

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து சிபிஐ காவலில் ப.சிதம்பரத்தை வைத்து நான்கு நாட்கள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ளதால் இன்று மாலை மீண்டும் சிதம்பரம் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது மீண்டும் சிபிஐ தரப்பு சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை சிபிஐ காவலை மேலும் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐயின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காத பட்சத்தில் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார். இதற்கிடையே இந்த வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை சிதம்பரத்தைக் கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்குகளில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அவர் விடுதலையாகிவிடுவார். ஆனால், சிபிஐ காவலை நீட்டிக்க மறுத்து, உச்ச நீதிமன்றமும் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டால் அவர் திகார் சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்படும்.

seithichurul

Trending

Exit mobile version