தமிழ்நாடு

“அண்ணன் எடப்பாடி பழனிசாமியால் சாதகமான சூழல் உருவாகியிருக்கு!”- ஓ.பி.எஸ் சூசக பேச்சு

Published

on

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றதால் தேர்தல் களத்தில் அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் சுமார் 8,200 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், தங்களுக்காக விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக தலைமைக் கழகம் நேர்காணலுக்கு அழைத்திருந்தது.

காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில், நேர்காணல் நடைபெற்றது.

அப்போது சிறப்புரை ஆற்றிய பன்னீர்செல்வம், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நான்கு ஆண்டு காலமாக, அதிமுகவின் சாதனைகளுக்கும் சாதனைத் திட்டங்களுக்கும் எந்த வித சேதாரமும் இல்லாமல் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிறப்பான ஆட்சியை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த காரணத்தினால் தற்போது தமிழகத்தில் நமக்குச் சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது.

10 ஆண்டு காலம், கழக ஆட்சியைக் கொடுத்திருக்கிறோம். ஜெயலலிதா சொன்னது போல இன்னும் 100 ஆண்டு காலம் கடந்தாலும் அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி செய்யும். தற்போதைய தேர்தல் களமும் நமக்குச் சாதகமாக உள்ளது’ என்று கூறினார்.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி, மக்களின் மதிப்பை நாம் பெற்றிருக்கிறோம். அதிமுக ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் கருதுகின்றனர். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால்… நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவோம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், அதிமுகவை எதிர்க்கக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை” என்று அதிரடியாக பேசினார்.

 

seithichurul

Trending

Exit mobile version