தமிழ்நாடு

தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஓபிஎஸ் விளக்கம்!

Published

on

தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கவே இந்த முயற்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் ஓபிஎஸ் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கல்லூரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கும் தகவல் அறிந்த திமுக, காங்கிரஸ், அமமுகவினர் அங்கே உடனடியாக குவிந்தனர்.

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றிக்காக மோசடி செய்வதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமமுகவினர் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹுவிடமும் முறையிட்டனர்.

இந்நிலையில் ஒரு சில இடங்களுக்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று ஓபிஎஸ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளித்துள்ளது.

ஒப்புகை சீட்டுக்களை எடுத்துவிட்டு வாக்குப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வாக்குச் சாவடிகளிலும் ஏஜெண்டுகள் ஒப்புதல் தந்ததனால் ஒப்புகை சீட்டுகளை எடுக்காமலேயே வாக்குப் பதிவு நடத்தியுள்ளார். அதனால்தான் அங்கு மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேறு எந்த தவறுகளும் நடப்பதற்கு அங்கு இடமில்லை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version