தமிழ்நாடு

ஓபிஎஸ், பொன்னார் கார் முற்றுகை: புயல் பாதித்த மக்கள் ஆவேசம்!

Published

on

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காததால் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

எந்தவித நிவாரணங்களும் சென்றடையாததால் அங்கு வரும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்ட திணறடிக்கின்றனர். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரது காரை முற்றுகையிட்டு முறையிட்டனர்.

துணை முதல்வர் ஓபிஎஸ் கந்தர்வக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவரது காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல மன்னார்குடி 33-வது வார்டில் வந்த மத்திய அமைச்சர் பொன்னாரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிய மின்கம்பங்கள் இன்னும் வரவில்லை, இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். மின்கம்பங்களை அனுப்பி வைக்க பரிந்துரைக்கிறேன் என்று உறுதியளித்த பின்னர் தான் பொதுமக்கள் அவரது காருக்கு வழிவிட்டனர்.

Trending

Exit mobile version