தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வா? இன்று அறிவிப்பு!

Published

on

அதிமுக உட்கட்சி தேர்தலில் இன்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது என்பதும் குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டதாகவும் அதிமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பதும் இந்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த ஒரு சிலர் விரட்டியடிக்கப்பட்டதாகவும் அவர்கள் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் என்றும் அதிமுக தரப்பில் தெரிவித்தனர். விண்ணப்ப மனு கேட்டு வந்தவர்களை விரட்டியடித்ததற்கு சசிகலா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதாலும் இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்பதாலும் இன்று மாலை அதிகாரபூர்வமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பு பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version