தமிழ்நாடு

சசிகலா புஷ்பா மூலம் வைகோவுக்கு காத்திருக்கும் இன்னொரு சிக்கல்!

Published

on

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானது.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் புதிய சிக்கல் ஒன்று வந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநிலங்களவையில் அதிமுக எம்பியாக ஜெயலலிதாவுக்கு எதிராகவே குரல் கொடுத்த சசிகலா புஷ்பா தான் தற்போது வைகோவுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா அதிமுக எம்பியாக இருந்தாலும் அவர் தற்போது பாஜக ஆதரவு எம்பியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மாநிலங்களவை சபாநாயகரும், துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் வைகோ பற்றிய ஒரு புகார் மனுவை கொடுக்க தயாராக உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

அந்த மனுவின் சாரம்சமாக இருக்கப்போவது, வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை, இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பணியாற்ற அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதாகும்.

இது வேறுமாதிரியான செய்தியை இளைஞர்களுக்கு சொல்வதாக அமைந்துவிடும். எனவே வைகோவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என சசிகலா புஷ்பா தனது மனுவில் கூற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சிக்கலையும் வைகோ தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version