உலகம்

ஒபாமா நிர்வாகம் தெரிந்தே தீவிரவாத தொடர்புடைய நிறுவனத்திற்கு நிதி வழங்கியுள்ளது.. வெளியான ஷாக் ரிப்போர்ட்

Published

on

வாஷிங்டன் : அமெரிக்காவின் செனட் அறிக்கை ஒன்று ஒபாமாவின் நிர்வாகம் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் இணை நிறுவனத்திற்கு நிதி வழங்கியதாக கூறியுள்ளது. இதில் ஆச்சர்யம் கொடுக்கக்கூடிய தகவல் என்னவென்றால் இதை தெரிந்தே மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவிற்கு எதிராக அமெரிக்கா மிக தீவிரமாக செயல்பட்டது. குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அந்த அமைப்பின் தலைவர் ஒசாமாவை ஒழிக்க வேண்டும் என்பதில் மும்மரம் காட்டி வந்த அமெரிக்கா, கடந்த 2011 ஆம் ஆண்டு அதை நிறைவேற்றியது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் உள்ளே புகுந்து சுட்டுக்கொன்றனர். அதன்பிறகு அல்கொய்தாவின் செயல்பாடும் பெருமளவில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் ஒபாமா நிர்வாகம் தெரிந்தே அல்கொய்தாவின் இணை நிறுவனத்திற்கு நிதி வழங்கியுள்ளதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நிவாரண முகமைக்கு (ISRA) ஒபாமா நிர்வாகம் சர்ச்சைக்குரிய நிதி வழங்கியது குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக் கிராஸ்லி தலைமையிலான செனட் நிதிக் குழு, ஒபாமா நிர்வாகம் அல்-கொய்தாவின் இணை நிறுவனத்திற்கு 200,000 டாலர் மானியம் வழங்க ஒப்புதல் அளித்தது என்று கூறியுள்ளது. இந்த பணம் கடந்த 2014 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்று செயல்படும் வேர்ல்டு விஷன் யுனைடெட் ஸ்டேட்ஸ் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

ஆனால் 2004 ஆம் ஆண்டே இஸ்லாமிய நிவாரண முகமை மீது அமெரிக்க அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. தேசிய மதிப்பாய்வின் படி, இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பயங்கரவாத தொடர்புகள் குறித்து வேர்ல்ட் விஷன் அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேர்ல்ட் விஷன் அமைப்பிற்கு சூடான் உள்ளிட்ட பகுதிகளில் மனிதநேய செயல்பாடுகளை செய்வதற்காக வழங்கப்பட்ட 723,405 டாலர்களை பயன்படுத்தி இஸ்லாமிய நிவாரண முகமை அமைப்பை வெளியில் இருந்து எடுத்து அவர்களுடைய திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் பணம் வழங்குவதற்கு முன்பு அதன் நிர்வாகம் சரியான சோதனை முறைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலட்சியம் ஒருபோதும் காரணமாகாது:

இதுகுறித்து கூறியுள்ள செனட் குழுவின் தலைவர் கிராஸ்லி, உலகம் முழுவதும் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக வேர்ல்ட் விஷன் செயல்படுகிறது, அந்த பணி பாராட்டத்தக்கது. ஆனால் இஸ்லாமிய நிவாரண முகமை அமைப்பு பொருளாதார தடை விதித்த பட்டியலில் இருந்தது அல்லது அந்த அமைப்பிற்கு தீவிரவாத தொடர்பு இருந்ததால் தான் அது பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பதை வேர்ல்ட் விஷன் அறிந்திருக்கவில்லை. சரியான சோதனை மேற்கொள்ளாமல் விட்ட அலட்சியம் ஒருபோதும் காரணமாகாது. தற்போது ஆய்வு செய்யும் நடைமுறையை வேர்ல்ட் விஷன் மாற்றியிருப்பது ஒரு நல்ல முதல் படியாகும், அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருவதாக கடந்த ஆண்டே செய்தி வெளியிட்டதாகக் கூறியுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்புகளின் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டணியின் இடைசெயல்பாடு வழியாக நடைபெற்றது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 2014 ஆம் ஆண்டே இஸ்லாமிய நிவாரண முகமைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து வேர்ல்ட் விஷனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அந்த அமைப்பிற்கு தற்காலிக அனுமதி வழங்குமாறு வேர்ல்ட் விஷன் கோரிக்கை வைத்துள்ளது. அதன்பின்னர், வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வேர்ல்ட் விஷனுக்கு அதன் சேவைகளுக்காக இஸ்லாமிய நிவாரண முகமை அமைப்பிற்கு 125,000 டாலர்கள் செலுத்துவதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. ஆனால் அத்துடன் ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியது, அதில் இஸ்லாமிய நிவாரண அமைப்புடன் அதன் ஒத்துழைப்பு உலகளாவிய பயங்கரவாத விதிமுறைகளை மீறியதாக அறிவித்துள்ளது.

செனட் குழு அதன் அறிக்கையின் முடிவில், வேர்ல்டு விஷன் பொருத்தமான பொதுத் தகவல்களை அணுகுவதோடு, இஸ்லாமிய நிவாரண அமைப்பை
ஒரு துணை மானிய நிறுவனமாக எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் அதில் தோல்வியுற்றது. இதன் விளைவாக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை ஒசாமா பின் லேடன் உள்ளிட்ட தீவிரவாத தொடர்புடைய வரலாறுகளை வைத்திருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version