தமிழ்நாடு

கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் ரயில்வேயில் தமிழ் பேச விதிக்கப்பட்ட தடை வாபஸ்!

Published

on

கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கட்டுப்பாட்டு அறையுடன் பேச இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழில் பேசும்போது பணியில் உள்ள ஒரு சில வெளிமாநில பணியாளர்களால் தமிழை புரிந்துகொள்ள முடியாததால் ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வெளிமாநிலத்தவர்கள் புரிந்துகொள்வதற்காக தென்னக ரயில்வேயில் இருந்து தமிழை நீக்கியுள்ளது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கவிஞர் வைரமுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமான அறிக்கை வெளியிட்டு கடுமையாக எச்சரித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ரயில்வே தெற்கு மண்டலம் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை நேரில் சந்தித்து, தமிழில் பேசத் தடை விதிக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற மனு அளித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து மே 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது. இந்தச் சுற்றறிக்கை தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த நடைமுறையே தொடரும். அதிகாரிகள் புரிந்துகொள்ளும்படி எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என பொது மேலாளர் ராகுல் ஜெயின் தெரிவித்தார்.

Trending

Exit mobile version