தமிழ்நாடு

தேமுதிக வராவிட்டால் கவலையில்லை: கைகழுவும் அதிமுக!

Published

on

தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமைகளின் கீழ் முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கீழ் கொண்டு வர அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக எங்கள் கூட்டணிக்கு தான் வரும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. பாஜகவின் பியூஷ் கோயல் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் விஜயகாந்தை சந்தித்தனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தேமுதிக தற்போதுவரை யாருக்கும் பிடிகொடுக்காமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. தேமுதிகவின் பலத்துக்கு உரிய கவுரவமான இடங்கள் கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

அப்போது, தேமுதிகவின் விருப்பத்தை அவர்கள் தெரிவிக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை கூட்டணிக் கதவுகள் திறந்து உள்ளது. அந்த வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரும் என கூறிவந்த அதிமுக தற்போது தேமுதிக வராவிட்டால் கவலையில்லை என கூறியிருப்பது அவர்களை கைகழுவ பார்க்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version