உலகம்

நிலக்கரி வாங்க பணமில்லாததால் 7 மணி நேரம் மின்வெட்டு: திவாலை நோக்கி செல்கிறதா இலங்கை?

Published

on

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு திவாலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசுக்கு நிலக்கரி வாங்க பணமில்லை. இதனால் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் பல மணி நேரம் இருளில் மூழ்கி இருப்பதாகவும் வரும் நாட்களில் மின்வெட்டு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே டீசல் விலை 250 ரூபாய் கடந்து விட்டது என்பதும், ஒரு முட்டை 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்றும், 90 சதவீத அளவுக்கு ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு கிலோ அரிசி 250 ரூபாயை தாண்டி விட்டதாக கூறப்படுவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூட அடிப்படை பொருட்களை வாங்க முடியாமல் இலங்கையில் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் அதிகமாகி அன்னிய செலவாணி கையிருப்பு முற்றிலும் தீர்ந்து விட்டதால் வெளிநாடு பொருள்களை ஏற்றி வந்த கப்பல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகளும் மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாக கடன் பெற்று நெருக்கடியை சமாளிக்க இலங்கை முயற்சித்து வருவதாகவும் சர்வதேச செலவாணி நிதியத்திடம் கடன் பெற முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நிய செலவாணி மதிப்பு குறைந்தது மற்றும் இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவை முக்கிய காரணம் என பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version