இந்தியா

ஆல்பா, டெல்டா, வைரஸ்களை அடுத்து லாம்ப்டா வைரஸ்: இந்தியாவில் பரவுகிறதா?

Published

on

கடந்த ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உருமாறி வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது என்பதும் இதனால் மனித இனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் கொரோனா வைரஸ் உருமாறி ஆல்பா, பீட்டா, காமா, கப்பா என்று பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை உருமாறி லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி வருவதாகவும் இது கொரோனா வைரசை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தற்போது தான் மிக அதிகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் லாம்ப்டா வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து இந்த வைரஸ் குறித்த பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

லாம்ப்டா வைரஸ் டெல்டா வைரசை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என இங்கிலாந்து சுகாதார மையம் எச்சரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் இன்னும் இரண்டாவது அலை முழுமையாக முடியவில்லை என்றும் இந்த சூழலில் நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைகாட்டத் தொடங்கி உள்ளதால் நம் நாட்டிலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் ஆனால் லாம்ப்டா வைரஸ் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Trending

Exit mobile version