தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை: டெல்லி விரையும் அமைச்சர்

Published

on

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், இதுவரை கிடைக்கப் பெற்ற கொரோனா டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டில் பணிகள் தொடங்கப்பட்டாலும், பொது மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி குறித்து நிலவிய அச்சமும், ஒன்றிய அரசு சரியாக கொடுக்காத விளக்கங்களுமே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கொரோனா தடுப்பூசி முகாம்களை மாநிலம் முழுவதும் அதிகரிக்கச் செய்து, மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு தரப்பு தமிழ்நாட்டுக்குப் போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.

இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே, தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக வரும் வியாழன் அன்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version