கிரிக்கெட்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு நோ என்ட்ரி!

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது.

கொரோன பரவல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தொடரின் போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்கள் மட்டும் பயோ-பபுள் முறையில், அதாவது கொரோனா பரவாத வகையிலான வளையத்தில் தங்கி முழுத் தொடரையும் விளையாடினார்கள்.

தற்போது நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இந்த முறை அணிகளாக இருக்கும் பஞ்சாப், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போட்டிகள் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளது.

சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும், நடைபெறும் எந்தப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடாது. இதனால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் தொடக்க நிலையில் நடைபெறும் லீக் போட்டிகளைக்காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று ஒரு தகவல் வந்திருக்கிறது. இறுதியாக நடக்கும் குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டியில் வேண்டுமானால் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவலே இந்த முடிவுக்குக் காரணம் என பிசிசிஐ உள்வட்டாரத் தகவல்.

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Trending

Exit mobile version