தமிழ்நாடு

கோவையில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Published

on

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தினசரி 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அம்மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் சனி, ஞாயிறு கிழமைகளில் இயங்க தடை என்றும், அனைத்து பூங்காக்களிலும் சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை என்றும், அனைத்து மால்களும் சனி ஞாயிறு அன்று மூடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியமான கடைகள் தவிர மற்ற கடைகள் இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்றும், இரவு 8 மணி அளவில் இருந்தே வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் 6 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் இயங்க அனுமதி என்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடன் இயங்க அனுமதி என்றும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுவதாக குறிப்பாக பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சி விவரங்களை முன்கூட்டியே வட்டாட்சியரிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோவை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version