தமிழ்நாடு

தமிழகத்துக்கு மீண்டும் புயல் எச்சரிக்கை: கஜா புயலை தொடர்ந்து பெய்ட்டி புயல்!

Published

on

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்குத் திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு பகுதியில் 750 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 1,040 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டணத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 1,210 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ,அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும், அதன் பின்னர் தீவிரப்புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. மேலும் 72 மணி நேரத்தில் இது வடமேற்குத் திசையில் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் வட தமிழகத்திலுள்ள கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பெருமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் 15, டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். இந்த புயலினால் பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பு இல்லை. புயல் கரையை நெருங்கும்போது நிலக்காற்று வீச வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இதனால் மழை குறையும். ஆனால் வட தமிழக மாவட்டங்களில் மழை இருக்கும். இந்த புயலுக்கு பெய்ட்டி என்ற பெயர் வைக்கப்படவுள்ளது. நேற்று எண்ணூர், கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version