உலகம்

கொரோனாவின் புது வகை; இங்கிலாந்தில் கட்டுகடங்காமல் பரவிவிட்டதா..? – WHO முக்கிய தகவல்

Published

on

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பான WHO, அதிதீவிரமாக பரவும் இந்த புது வைரஸ் இங்கிலாந்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், அதை முறையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு சமயங்களில் மிக அதிகம் மற்றும் அதிதீவிர பரவல்கள் இருந்து வந்தன. அதை ஒப்பிடும்போது இங்கிலாந்து தொற்றுப் பரவல் சற்று குறைவாகத்தான் உள்ளது. இதை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும். தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இந்த புது வைரஸ் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடவில்லை. அதே நேரத்தில் அதுவாக தொற்றுப் பரவலை குறைத்துக் கொள்ளும் என்று எண்ணிவிட முடியாது. முறையான நடவடிக்கைகள் தேவை’ என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

முன்னதாக இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் மேட் ஹேங்காக், ‘கொரோனாவின் இந்த புது வகை கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. முன்னர் இருந்த வைரஸைவிட இது 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது’ என்று கூறினார். இங்கிலாந்தைப் போலவே தென்னாப்பிரிக்காவிலும் புதுவித கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையொட்டி உலகின் 30 நாடுகள் இந்த இரு நாடுகளுடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

இந்த மாதம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மிக அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு இந்தப் புதிய வைரஸ் தொற்றும் ஓர் காரணம் என்று தெரிகிறது. இந்த புதுவித வைரஸால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்குமா என்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. இது புது வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் நேற்று முன்தினம் முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று கூறி அதிக கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் அமல் செய்யப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version