இந்தியா

புது கொரோனா பதற்றம்: ஊரடங்கு போட்ட மாநில அரசு!

Published

on

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புது வைரஸை கணக்கில் கொண்டு, கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, ‘புதிய வகை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய உத்தரவால் கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பாதிப்பு இருக்கும் எனப்படுகிறது. மத்திய மற்றும் தமிழக அரசுகள், புதுவித கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு சீக்கிரமே முக்கிய முடிவு எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

Trending

Exit mobile version