உலகம்

கிடுகிடுவென பரவும் ‘புது கொரோனா’ பல நாடுகளில் இருக்கலாம்: WHO விஞ்ஞானியின் பகீர் பேச்சு!

Published

on

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கக் கூடும் என்கிற அதிர்ச்சிகர தகவலைத் தெரிவத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் குறித்து ஒரு முழுமையான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு புதுவித கொரோனா வைரஸ் வந்தால் அந்த நாட்டால் உடனடியாக கண்டுபிடிக்க முடிகிறது. அவர்களைப் போல மற்ற நாடுகளும் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, புதுவித வைரஸ் அவர்கள் நாட்டிலும் பரவியிருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வரக்கூடும். அதே நேரத்தில் தற்போதைக்கு இது குறித்து எந்தவொரு முடிவுகளுக்கும் வர வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு சமயங்களில் மிக அதிகம் மற்றும் அதிதீவிர பரவல்கள் இருந்து வந்தன. அதை ஒப்பிடும்போது இங்கிலாந்து தொற்றுப் பரவல் சற்று குறைவாகத்தான் உள்ளது. இதை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும். தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இந்த புது வைரஸ் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடவில்லை. அதே நேரத்தில் அதுவாக தொற்றுப் பரவலை குறைத்துக் கொள்ளும் என்று எண்ணிவிட முடியாது. முறையான நடவடிக்கைகள் தேவை’ என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

முன்னதாக இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் மேட் ஹேங்காக், ‘கொரோனாவின் இந்த புது வகை கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. முன்னர் இருந்த வைரஸைவிட இது 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது’ என்று கூறினார். இங்கிலாந்தைப் போலவே தென்னாப்பிரிக்காவிலும் புதுவித கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையொட்டி உலகின் 30 நாடுகள் இந்த இரு நாடுகளுடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

 

Trending

Exit mobile version