தமிழ்நாடு

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு ஒப்புதல்!

Published

on

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டார பகுதியினரும், அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் உத்தரவிட்டுள்ளதா? அவ்வாறு உத்தரவிட்டிருந்தால் அதுகுறித்த விரிவான தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரம் என்னும் இடத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.

மலையில் 2 கிமீ நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து 51000 டன் இரும்பு கலோரிமீட்டர் கருவி மூலமாக நியூட்ரினோவைக் கண்டறிவதற்காக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தால் சுற்றுப்புறச் சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் கூறியுள்ளார். இதுகுறித்த அறிக்கையை மத்திய அணுசக்தி துறை வெளியிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன தமிழகச் சூழலியல் அமைப்புகள்.

seithichurul

Trending

Exit mobile version