சினிமா செய்திகள்

விமர்சனம்: ’நோ’னா ‘நோ’ தான் : பெண்களுக்கு காவலனான நேர்கொண்ட பார்வை!

Published

on

காதல் மன்னனாக, கடத்தல்காரனாக பல படங்களில் நடித்து வந்த தல அஜித் பெண்களின் காவலனாக முதன்முதலாக நடித்துள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை. வேதாளம் படத்தில் பெண்கள் குறித்து அவர் சொன்ன ஒரு சின்ன வசனமே பல பெண்களுக்கு பல பாதைகளை திறந்து விட்ட நிலையில், படம் முழுக்கவே ஃபெமினிசம் பேசியுள்ளார். பெண்களுக்கு தேவையான சுதந்திரம் குறித்து வெளிப்படையாக வாதாடியுள்ளார்.

நள்ளிரவே சில தியேட்டர்களில் நேர்கொண்ட பார்வை காட்சிகள் திரையிடப்பட்டு திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டு வருகின்றன.

காலை 4 மணிக்கே பல திரையரங்குகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக படம் ஓடி வருகின்றது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத்துக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக நேர்கொண்ட பார்வை அமைந்துள்ளது.

ஒரே டெம்ப்ளேட் படங்களில் இருந்து தல அஜித், நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்து அசத்தியுள்ளது அவரது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் அஜித்துக்கு நிச்சயம் வசூலை மட்டும் அல்ல நல்ல படம் என்ற பெயரையும் பெற்று தந்துள்ளது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் காரம் குறையாமல், அஜித் ரசிகர்களுக்காக ஒரு சண்டை காட்சி மற்றும் வித்யா பாலனுடன் ஒரு காதல் பாடல் வைத்து எண்டர்டெயினும் செய்துள்ளார் வினோத்.

அடுத்தும் இவர் இயக்கத்தில் இவர் ஸ்டைலில் ஒரு அஜித் படம் உருவாகவுள்ளது அஜித் ரசிகர்களுக்கான இரண்டாவது லட்டு.

படத்தின் கதை அனைவரும் அறிந்தது தான். மூன்று பெண்கள் குடித்து விட்டு, பார்ட்டி செய்யும் போது, ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சிக்க, அவர் அவனை பாட்டிலால் தாக்க, அவன் பெரிய இடத்து பையன் என்பதால், கொலை முயற்சி வழக்கில் நாயகி கைது செய்யப்படுகிறார்.

கர்ப்பிணி மனைவியை இழந்த சோகத்தால் மன நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை முடிந்து அந்த பெண்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் குடியமரும் அஜித், அந்த பெண்களுக்காக வாதாடி வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே படத்தின் கதைக்களம்.

வக்கீலாக அஜித், பேசும் இடங்களில் எல்லாம் பஞ்ச் சிக்சர் அடிக்கிறார். அவரை எதிர்த்து பேசும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நல்ல தேர்வு.

ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

விபச்சாரியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் ’நோ’ சொன்னால் ‘நோ’ தான் என்ற தார்பரியத்தை மையமாக வைத்து படம் நகரும் விதம் அருமை.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களையும் தாண்டி பெண்கள், குடும்பம் என அனைவரும் சென்று பார்க்கும் அஜித் படமாக இந்த வருஷம் விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படத்தை தல அஜித் கொடுத்துள்ளார்.

மூவி ரேட்டிங் 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version