சினிமா செய்திகள்

நிறைய கருத்து… கொஞ்சம் பில்ட் அப்… நேர்கொண்ட பார்வை எப்படி இருக்கிறது…

Published

on

வசதியான மூன்று ஆண் நண்பர்களுடன் செல்லும் மூன்று நடுத்தர குடும்ப பெண்கள் அந்த ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களில் ஒருவனை பலமாக தாக்கி விடுகிறார் அப்பெண்களில் ஒருவர். தாக்கப்பட்டவன் எம்எல்ஏ.வின் வருங்கால மருமகன்… சொல்லவா வேண்டும்… அதிகாரமும்… பணமும்… பெண்களிடம் அடி வாங்கி விட்டோமே என்ற ஆணாதிக்க மனநிலையும் அந்த பெண்களுக்கு மேலும் தொல்லை கொடுக்க வைக்கிறது. அவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க அந்த பெண்கள் என்ன செய்தார்கள்… அல்லது அஜித்தின் உதவியுடன் அதிலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதை சொல்லும் படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’யின் கதை…

2015ம் ஆண்டு வெளியான ‘பிங்க்’ என்ற இந்தி படத்தின் அதிகாரபூர்வ தமிழாக்கம் தான் நேர்கொண்ட பார்வை. தமிழுக்கு ஏற்ற மாதிரி சின்ன சின்ன மாற்றங்களும் அஜித் ரசிகர்களுக்காக சின்னதாக ஒரு பில்டப்பும் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலும் வசனங்கள் பெண் சுதந்திரம் பற்றி… ஆண் பெண் உறவு பற்றியே இருக்கின்றன. படத்தின் பலமே இந்த வசனங்கள் தான். இந்தியில் இருந்த வசனங்கள் அப்படியே தமிழில் சில மாற்றங்களோடும் சில பழமொழிகளோடும் இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். வசனங்கள் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் பெண்கள் கைதட்டலும்… சில இடங்களில் ஆண்களின் கைதட்டலும் தியேட்டரில் கேட்டது. (வசனங்கள் என்ன எப்படி இருந்தன என்று தியேட்டரில் பாருங்கள்).

ஒளிப்பதிவு நீரவ் ஷா. பெரிய அளவில் ஒளிப்பதிவுக்கு வேலை இல்லாத இந்தப்படத்திற்கு நீரவ் ஷாவின் தேவை என்ன என்று தெரியவில்லை.

இசை யுவன் சங்கர் ராஜா… பிஜிஎம்… பின்னணி இசை என மீண்டு வர முயற்சி செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இடைவேளையின்போது அஜித்துக்கு ஒரு சண்டைக்காட்சியில் பிஜிஎம் அட்டகாசம். ஆனால், பாடல்களில் இன்னும் உங்கட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் ராஜா என்றுதான் சொல்ல தோன்றுகிறது…

சதுரங்க வேட்டை… தீரன் அதிகாரம் ஒன்று என அட்டகாசமான திரைக்கதையில் படம் பண்ணும் ஹெச்.வினோத் இந்தப் படத்துக்கு தேவையா என்ன? இந்தியில் உள்ளதை அப்படியே எடுத்திருக்கிறார். பெரிதாக மெனக்கேடாமல் இந்தியில் உள்ள ஜீவனை கெடுத்துவிடாமல் அப்படியே எடுத்துள்ளார் வினோத். முற்பாதியில் ஒரு டென்ஷன்… மிகை இல்லாத பிற்பாதி கோர்ட் ஜீன் பரபரப்புகள்… அஜித்துக்கான பில்டப்கள் என எல்லாம் கழ்ந்துகட்டி கொடுத்துள்ளார்.

வீரம்… வேதாளம்… விவேகம்… விஸ்வாசம் என மாட்டிக்கொண்ட அஜித் இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்… படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்தே பேசுகிறார். அதுவரை கொஞ்சம் பில்டப் ஏற்றிக்கொண்டே வந்து முதல் வார்த்தை பேசும் போது தியேட்டரில் இருந்த ரசிகர்கள் இதுக்காக தானே காத்திருந்தோம் என்று விசில் பறக்க விட்டனர்… பெரிய அளவில் முக்கியமில்லாத இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்தை பாராட்டலாம். பெண்கள் பற்றிய வசனங்கள் எல்லாம் தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ள அஜித் மூலம் சொல்லப்படுவதால் அது இன்னும் அதிகம் பேரை சென்று சேரும் என்று சொல்லலாம் (ஆனால் படத்தின் முக்கிய வசனமான “பெண் சொல்லும் நோ.வுக்கு அர்த்தம் நோ தான் என்பதை மையமிட்ட No means No என்ற வசனம் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுகிறது. இது அந்த வசனத்தின் தீவிரத்தை வழக்கம் போல அழித்துவிடும் என்பதுதான் உண்மை)அடுத்த படத்தில் நிச்சயம் வினோத் ஒரு அட்டகாசமான படத்தை அஜித்தை வைத்து கொடுப்பார் என நம்பலாம்.

கதையின் மைய பாத்திரங்களில் மீராவாக ஷ்ரதா ஸ்ரீநாத், பமிதாவாக பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியாவாக ஆண்ட்ரியா டைரங் கச்சிதமாக நடித்துள்ளனர். படம் முழுவதும் இவர்களை சுற்றிதான் நகர்கிறது என்றாலும் தமிழகத்தில் அஜித் படம் என்றுதான் இது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியில் டாப்ஸிக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தவிர வித்யா பாலன், டெல்லி கணேஷ், வில்லன்களாக வரும் அந்த மூவர் என ஓரளவு தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். முக்கியமாக எதிர்க்கட்சி வக்கீலா ரங்கராஜ் பாண்டே. நன்றாக நடித்துள்ளார் என்றாலும் பல இட்டங்களில் கேள்விக்கு என்ன பதில் பார்க்கும் உணர்வையே அவரது நடிப்பு கொடுத்தது. எதிர்காலத்தில் அவரிடம் இன்னும் எதிர்பார்க்கலாம்…

இந்த படத்தின் ஜீவனே வசனமும் அந்த கோர்ட் காட்சிகளும் தான்… மிக முக்கியமான கருத்தை சொல்லும் படம். ஆனால் இந்த கருத்துகள் எல்லாம் இந்தியில் சொல்லப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து தான் நமக்கு வந்துள்ளன. அது மட்டும் அல்ல விதி படத்துக்கு பிறகு மிக நீண்ட கோர்ட் காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது. அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றத்தை தரும் படம் தான்… இப்படியான படங்கள் தேவைதான் என்றாலும் அறிவுரை சொல்வது போல அமைந்து விடக் கூடாது. சொல்லப்போனால் இந்தப் படத்தின் பலம் பலவீனம் இரண்டும் அந்த கருத்து சொல்லும் வசனங்கள் தான்…

மிக முக்கியமான விசயத்தை எடுத்துசொல்லும் இந்தப்படத்தை பெண் நண்பர்களோடு சென்று ஒரு முறை பார்த்துவிடலாம். நிச்சயம் காசுக்கு இழப்பு இருக்காது… அஜித் ரசிகர்கள் கொஞ்சம் காமன் ஆடியன்ஸுக்கு வழிவிட்டு நிற்கலாம். இந்தப் படத்திற்கு மட்டும்…

— ச.அழகுசுப்பையா

seithichurul

Trending

Exit mobile version