தமிழ்நாடு

நீட் தேர்வுக்கான பயிற்சி ரத்தா? மாணவர்கள் அதிர்ச்சி!

Published

on

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மாணவர்கள் தரப்பில் இருந்து அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் சேர்வதற்கு நீட் பயிற்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு நடத்தி வருகிறது. பணவசதி உள்ளவர்கள் லட்சக்கணக்கில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு நீட் பயிற்சியை அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட்தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தால் முரணாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி இருக்காது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்திருப்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தரப்பிலிருந்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதால் அந்த இட ஒதுக்கீட்டை அவர்கள் பயன்படுத்தும் வகையில் நீட் தேர்வை நன்றாக எழுத வேண்டியது அவசியம் என்றும் எனவே அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தமிழ் நாட்டை தாண்டி வெளி மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கும், ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என்றும் எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version