விமர்சனம்

நாயாட்டு: மலையாளப் பட விமர்சனம்

Published

on

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நாயாட்டு படத்திற்கான நம் பார்வைதான் இங்கே. ‘காவல்துறையைச் சேர்ந்த மூவர், காவல் துறையினராலேயே வேட்டையாடப்படும் பின்னணியைப் பேசுகிற நாயாட்டு.

ஓர் எதிர்பாராத விபத்து, காவல்துறையைச் சேர்ந்த மூன்று நபர்களை சிக்கல்களுக்குள் இட்டுச் செல்கிறது. அரசு என்னும் இயந்திரத்திற்கு முன்னால் காவல்துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியர்கள் சாதாரணமாகி விடுகிற எதார்த்தத்தை இந்தத் திரைப்படம் சித்திரித்திருக்கிறது.

காவலர்களாக குஞ்ஞாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன் ஆகிய மூவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் தலித் விரோதப் படம், தலித் அரசியலைப் பேசும் படம் என பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால், இது சின்னக் கதை அதைச் சுற்றிய கட்சிதமாக பின்னப்பட்ட திரைக்கதையை உடைய வழக்கமான மலையாளத் திரைப்படம். அரசியலில், தேர்தல் காலத்தில் நடக்கும் அத்தனையையும் எப்படி ஒரு தலைவர் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறான் என்று இந்தப் படம் சொல்கிறது என்றும் சொல்லலாம். சேட்டன்கள் எப்போதும் அரசியலை விமர்சிக்கத் தவறுவதில்லை. அதற்கு அங்கிருக்கும் அரசு அவர்களுக்கு அளித்துள்ள படைப்பு சுதந்திரத்தைத்தான் நாம் பெரிதாக பாராட்ட வேண்டும். நாயாட்டு படத்திலும் கம்யூனிஸ்டுகளை மட்டுமல்ல இப்போது இருக்கும் முதல்வர் போல ஒரு கேரக்டரை உருவாக்கு அது எப்படி அரசியல் ஆதாயம் தேடுகிறது என்பதை இயல்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

சின்னக் கதைக்கு ஏற்ற இசை, வழக்கமான ஏரியல் ஷாட்டுகளுடனான ஒளிப்பதிவு என ஒரு மலையாளப் படத்தில் இருக்கும் அத்தனையும் இருக்கிறது. தமிழ் சினிமாக்களில் மலையாளிகளை டீக்கடை ஆண்டிக்களாக ஜாக்கெட்டுடன் காட்டுவதுபோல மலையாளத்தில் தமிழர்கள் என்றாலே பட்டி, கஞ்சா விற்பவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற காட்சிகள் இதிலும் இருக்கின்றன.

கொரோனா காலத்தில் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நமக்கு ஒரு நல்ல பீல் குட் மூவி பார்த்த எபெக்டை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். அதிகாரத்தின் பார்வையில் தேவையான போது எல்லோரும் இரைதான். அது யாராக இருந்தாலும் கவலைப்படாது என்பது பொட்டில் அறைந்தது போல நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது நாயாட்டு.

இறுதிக் காட்சி முடிந்து உட்காரும் போது ஒரு கையாளாகத் தனத்தை உணர முடிந்தது. நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் அந்த கையாளாத இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். நெட்பிளிக்ஸில் இருக்கும் இந்த நாயாட்டுவை ஒருமுறை பார்க்கலாம். நிச்சயம் நிறைய விவாதங்களை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். அதுதானே சினிமாவின் நோக்கம். பயன்.

Trending

Exit mobile version