தமிழ்நாடு

எச்.ராஜாவுக்கு இயக்குநர் நவீன் பதில்: ஷேக் தாவூத் என் பெயர் தான், ஆனால், நான் முஸ்ஸிம் அல்ல!

Published

on

சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கொளஞ்சி. இந்த படத்தை மூடர் கூடம் நவீன் தயாரித்துள்ளார். இதில் பேசப்பட்ட சில வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் வடநாட்டு கடவுள்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது பாஜகவின் எச்.ராஜாவை கோபப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் நவீனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எச்.ராஜா, இந்து பெயரில் ஒளிந்துள்ள சமூக விரோத சக்திகள் என்றும், நவீனுடைய பெயரை ஷேக் தாவூத் என்றும் கூறி ஒரு டுவிட் போட்டுள்ளார்.

இதற்கு நவீன் விளக்கம் கூறியிருந்த நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு நவீன் அளித்த பதிலில், நான் முஸ்லிம் தாய், தந்தையருக்கு பிறந்தவன் தான். ஆனால், நான் சிறுவயதிலேயே அதில் இருந்து வெளியே வந்து விட்ட ஒரு பகுத்தறிவாளன். நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. மனிதத்தை மட்டும் பேசுபவன். ஷேக் தாவூத் என்பது என்னுடைய பள்ளி சான்றிதழில் உள்ள ஒரு பெயர் மட்டுமே.

சிறுவயதில் இருந்தே என்னை அனைவரும் நவீன் என்றே அழைப்பார்கள். ஷேக் தாவூத் என யாரும் அழைப்பதில்லை. அப்படி அழைத்தால் எங்கள் ஊரில் யாருக்கும் என்னை தெரியாது என்பதே உண்மை என்றார். இதனையடுத்து அவரிடம் பிறப்பின் அடிப்படையில் இஸ்லாமியராக இருக்கிற ஒருவர், ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறார் என்று கேள்வி எழுகிறதே? என கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நவீன், இந்த கேள்வி ஆச்சரியமாக உள்ளது. நான் சமூகத்துக்காக ஆதரவாக பேசுகிறேன். அப்படி பேசினால் தப்பு என்று கூறுவீர்களா? ஜாதிய பெருமைகளை பேசுபவர்களை விட அதில் உள்ள மூட நம்பிக்கைகளை விமர்சிக்கலாம் என்பதை நான் அதிகம் நம்புகிறவன். அதனால், இந்துமதம் மட்டுமல்ல, இஸ்லாம் மதத்தில் உள்ள குறைகளையும் நான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நான் விமர்சனம் செய்கிறேன் என்பதே ஒரு தவறான கேள்வி.

நான் இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று பல நேர்காணல்களில் நேரடியாக கூறியிருக்கிறேன். அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நானே இஸ்லாமியன் அல்ல என்று கூறுகிறேன், அப்புறம் எதற்கு என்னுடைய மனைவியை மதமாற்றம் செய்ய போகிறேன். இது எல்லாமே இட்டுகட்டிய பொய்கள் என கூறியுள்ளார் அவர்.

Trending

Exit mobile version