உலகம்

தேசிய அவசரநிலை பிரகடனம்: நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கேப்ரியல் புயல்!

Published

on

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை இந்த புயல் ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

#image_title

நியூசிலாந்தின் வடக்கு பகுதியான ஆக்லாந்தில் கடந்த இரண்டு வாரங்களாக வரலாறு காணாத பேய் மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் நேற்று ‘கேப்ரியல்’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த பயங்கர புயலால் ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

மணிக்கு பல மைல் வேகத்தில் சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து, பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மின் இணைப்பை மீண்டும் கொண்டுவர பல நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காற்றுடன் கூடிய கனமழைக்கு மேலும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.

Trending

Exit mobile version