கிரிக்கெட்

ஆஸி., எதிராக சாதித்துக் காட்டிய நடராஜன்… புகழ்ந்து தள்ளும் கேப்டன் கோலி!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன. டி20 தொடரில் இந்தியா வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்திலிருந்து இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் நடராஜன். சர்வதேச அளவில் தான் அறிமுகமான முதல் டி20 தொடரிலேயே முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் அவரைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் இந்திய கேப்டன் விராட் கோலி.

கோலி கூறியதாவது:-

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தோம். அதன் பிறகு கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று எங்கள் திறமையை நிரூபித்தோம். அந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஒருநாள் தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வந்து, டி20 தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. கடைசி டி20 போட்டியில் கூட நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுவிட்டோம்.

இந்த டி20 தொடரைப் பொறுத்த வரையில் எங்கள் அணியின் பந்துவீச்சாளரான நடராஜனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாத நேரத்தில், அவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவர் மீது மிகுந்த அழுத்தம் இருந்தது. அப்படி இருந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மிகவும் சாந்தமாக இருக்கக் கூடியவர். கடுமையாக உழைக்கிறார். எல்லோருடனும் பணிவுடன் நடந்து கொள்கிறார். அவர் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும், கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன்.

எந்தவொரு கிரிக்கெட் அணிக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள் என்பது மிகப் பெரிய சொத்தாகும். இந்த தொடரில் அவர் பந்துவீசியது போல அவர் தொடர்ந்து செயல்பட்டால் அது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமையும்’ என்று புகழ்ந்து தள்ளினார்.

Trending

Exit mobile version