தமிழ்நாடு

நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து என்.ராம்: நீதிமன்ற சுவாரஸ்யம்!

Published

on

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் ஆசிரியர் கோபாலை தனிப்படை போலீசார் நேற்று சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடி அசத்திவிட்டார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் நேற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்த கைதுக்கு கண்டனங்கள் வந்தன. இந்நிலையில் நக்கீரன் கோபாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுக்க காவல்துறை முயற்சித்தது.

அப்போது இந்து என் ராம் நீதிமன்றத்தில் ஆஜராகி சில பாய்ண்டுகளை முன்வைத்தார். அவர் வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், அவரை ஊடக பிரதிநிதியாக வாதிட அனுமதித்தார் நீதிபதி. அவரது வாதத்தில், முக்கியமான மூன்று அம்சங்களை முன்வைத்தார்.

அவை, 1.நக்கீரன் இதழில் வெளியான சர்ச்சைக்குரியதாக கூறப்படும் கட்டுரைக்கும், தேசதுரோக வழக்குக்கான அரசியல் சட்டப் பிரிவு 124-கும் சம்பந்தமே இல்லை. 2.இந்தியாவிலேயே இந்தப் பிரிவில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறையாகும். ஆனால் இந்தப் பிரிவை பிரயோகிப்பதற்கான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை.

3.இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய கோர்ட் உத்தரவிட்டால் அது நாட்டுக்கே தவறான முன்னுதாரணமாகி விடும். அதற்கு சென்னை கோர்ட் காரணமாக அமைந்து விடக் கூடாது. பத்திரிகையில் வரும் கட்டுரைகளுக்கு 19 (1) ஏ சட்டப் பிரிவு பாதுகாப்பு தருகிறது. மேலும், பத்திரிகையில் வரும் படங்களுக்காகவும் நடவடிக்கை எடுக்க சட்டப்படி முடியாது. ஆளுநர் பதவியை தேவையின்றி இதில் இழுத்துள்ளனர் என்று வாதிட்டார் இந்து ராம்.

இந்த வாதங்கள் தான் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய முடியாது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதி உத்தரவிட காரணமாக அமைந்தது.

Trending

Exit mobile version