உலகம்

சீனாவின் செயல் அவமானகரமானது.. எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் மக்கள்

Published

on

யாங்கோன்: மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவு ஆதரவளிப்பதை எதிர்த்து யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில் கடந்த வாரம் திடீரென ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. அங்கு ராணுவ சர்வாதிகாரம் என்பது புதிது கிடையாது. நீண்ட காலமாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நாட்டிற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் ஜனநாயக ஆட்சியின் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்று இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி வந்தது.

இந்த நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை காரணமாக வைத்து ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மியான்மர் மீது பொருளாதார தடையும் விதித்தது. ஆனால் அந்த சமயங்களில் சீனா மட்டும் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வந்தது.

Also Read: இந்தியர்களை அதிகம் நம்பும் பைடன்.. நிர்வாகத்தின் மற்றொரு உயர் பதவியில் இருவர் நியமனம்

இதற்கிடையே ஒருநாள் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், மியான்மரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம், நிலைமையை மேலும் புரிந்துகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். மேலும் சீனா மியான்மரின் நட்பு நாடு. மியான்மரில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பின் கீழ் தங்கள் வேறுபாடுகளை சரியான முறையில் கையாள முடியும் மற்றும் அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறினார்.

இதன் பின்னர், மியான்மரின் 18 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பினர், இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் சிவில் அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கான மியான்மர் மக்களின் விருப்பத்தை சீனா அங்கீகரிக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் ராணுவ நடவடிக்கை மற்றும் தலைவர்களை சிறை வைத்துள்ளதை சீனா அங்கீகரிக்க கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை மியான்மரின் உள்நாட்டு விவகாரம் என்று ஒதுங்கிக்கொள்ள பார்த்தனர். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இருப்பினும் ஐநாவில் பேசிய சீன பிரதிநிதி மியான்மரில் தற்போது நடக்க கூடியவை அவர்களது உள் விவகாரங்கள் என்றார். ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் சீனாவுடன் இணைந்துகொண்டது. இதனால் இந்த இரண்டு நாட்டு தூதரகங்கள் முன்பு கூடிய மாணவர்கள் ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் அணைத்து தரப்பினரும் வீதியில் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் செயலால் வெட்கப்படுகிறோம் போன்ற கோஷங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். எங்கள் குரல்களைக் கேளுங்கள். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் சொந்த நலன்களுக்காக இராணுவ சதித்திட்டத்தை ஆதரிக்கின்றன. எங்களுக்கு அது தெரியும், இனிமேல் அவர்களை புறக்கணிப்போம் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

Trending

Exit mobile version