தமிழ்நாடு

பாலியல் பலாத்கார வழக்கில் முகிலன் கைது!

Published

on

கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் அதன் பின்னர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றவர் அதன் பின்னர் மாயமாகிவிட்டார்.

இதனையடுத்து முகிலனுக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்? உயிரோடுதான் இருக்கிறாரா என பல சந்தேகங்களுடன் தமிழகத்தில் முகிலனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் அவரை ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து முகிலனிடம் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். கரூர், குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர், முகிலன் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னிடம் உடலுறவு கொள்ள முயற்சித்தார். நான் மறுத்தும் என்னுடன் பலமுறை மிரட்டி உடலுறவு கொண்டு இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வருகிறார் என புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் முகிலன் மீது குளித்தலைக் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் முகிலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாலியல் வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்ப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Trending

Exit mobile version