கிரிக்கெட்

முகமது சிராஜ் அபார பந்துவீச்சு: பஞ்சாபை வென்றது பெங்களூர் அணி!

Published

on

16-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 27வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பெங்களூருவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். விராட் கோலியும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் பெங்களூருவின் இன்னிங்சை தொடங்கி வைத்தனர்.

பெங்களூர் 174 ரன்கள்

சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 7 ரன்னிலும் அவுட் ஆக, நிலைத்து நின்று ஆடிய டூ பிளஸ்சிஸ் 84 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது பெங்களூர் அணி.

பெங்களூர் வெற்றி

பின் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் (2 ரன்), மேத்யூ ஷார்ட் (8 ரன்), கேப்டன் சாம் கர்ரன் (10 ரன்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார்கள். பிரப்சிம்ரன் சிங் மட்டும் தனது பங்குக்கு 46 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் ஷர்மா அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல போராடினார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஒரே ஓவரில் ஹர்பிரீத் பிரார் (13 ரன்), நாதன் எலிஸ் (1 ரன்) ஆகியோருக்கு ‘செக்’ வைத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிய தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு உதவிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார்.

Trending

Exit mobile version