தமிழ்நாடு

ஔவையார், பாரதியாரை மேற்கோளிட்டு ஆவேச உரை; பின்னர் எடப்பாடியாருடன் நடந்த சீக்ரெட் சந்திப்பு – மோடி வருகையும் நடந்ததும்..!

Published

on

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி. 

இன்று காலை 10:30 மணி அளவில் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் மோடி. பின்னர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்தார். மிகக் குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ எனக் கூறி உரையைத் தொடங்கினார். மேலும் அவர் ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அவர், ‘சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி கொடுக்கிறது. இன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தமிழகத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும். 

விவசாய விளை பொருள் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.  கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

தொடர்ந்து அவர் மேடையிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினார். வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வைத்து களமிறங்கும் நிலையில், கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகளைப் போக்கவே பிரதமர் மோடி இப்படியான காரியத்தைச் செய்தார் என சொல்லப்படுகிறது. 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமியோடு மட்டும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி. அப்போது கூட்டணி வியூகங்கள் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல். சில நாட்களுக்கு முன்னர் தான் சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாகி தமிழக அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அவர் கூடிய விரைவில் அதிமுகவைத் தன் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து வித திட்டங்களையும் தீட்டி வருகிறார் என உள் வட்டாரத் தகவல். இப்படியான சூழலில் எடப்பாடியாருடன் தனியாக ஆலோசனை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரது கைகளையும் ஒரே மேடையில் ஒன்றாக உயர்த்திப் பிடித்தது உள்ளிட்ட விஷயங்களை மோடி செய்துள்ளது, சசிகலாவை ஓரங்கட்டவே என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும் மோடியின் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version