தமிழ்நாடு

“மார்ச்-7: ‘விடியலுக்கான முழக்கம்’ இலட்சிய பிரகடனம்!”- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

Published

on

வரும் மார்ச் 7 ஆம் தேதி, ‘விடியலுக்கான முழக்கம்’ இலட்சிய பிரகடனம் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 10 ஆம் தேதி, திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து மார்ச் 11 ஆம் தேதி, திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மார்ச் 7-இல் இலட்சியப் பிரகடனம் வெளியீடு; மார்ச் 10-இல் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; மார்ச் 11-இல் களத்தின் கதாநாயகனான கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு. அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன். அதே பொறுப்பும் கடமையும் உடன்பிறப்புகளான உங்களிடமும் இருக்கிறது.

கழகம் போட்டியிடும் தொகுதிகளிலும் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களே வேட்பாளராக நிற்கிறார் என்ற எண்ணத்துடன் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வாக்கு சேகரிப்பதற்கான குழுக்களை அமைத்து, தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் வீடுகளை நேரடியாகச் சென்றடைந்து, தொலைநோக்கு செயல்திட்டப் பிரகடனத்தை வாக்காளர்களிடம் வழங்கி, கழக ஆட்சி அமைந்ததும் இவற்றை நிறைவேற்றிட இருக்கிறோம் என்பதை எடுத்துரைத்து, வெற்றிக்கான வாக்குகளை உறுதி செய்திட வேண்டும்.

களம் தயார். நம் கைகளில் கணைகளும் தயார். அதனை ஏவுவதற்கான இலக்கும் தெளிவாக உள்ளது. ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் அதனை எப்படி, எவ்வாறு ஏவிட வேண்டும் என்பதற்கான பயிற்சிப் பாசறைதான் திருச்சியிலே மார்ச் 7-ஆம் நாள் நடைபெற இருக்கிற தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ சிறப்புப் பொதுக்கூட்டம். தீரர் கோட்டத்தில் வெளிப்படும் அந்த முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்! வெற்றிக்கான தொடக்கமாக அமையட்டும்! தமிழகத்தைக் கவ்வியுள்ள பத்தாண்டு கால இருட்டை விரட்டட்டும்! உடன்பிறப்புகளின் வருகையால் – பங்கேற்பால் – களப்பணியால் அவலம் மிகுந்த அ.தி.மு.க. ஆட்சி முடியட்டும். உதயசூரியனின் வெற்றிக் கதிர்களின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்” எனத் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Trending

Exit mobile version