தமிழ்நாடு

‘அடுத்து ஸ்டாலின் வேல் குத்துவார்… தீ மிதிப்பார்…!’- செல்லூர் ராஜூவின் கலகல கணிப்பு

Published

on

சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருத்தணியில் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்றார். அப்போது திமுகவினர் அவருக்கு கொடுத்த ஓர் வேல் கம்பை வாங்கி உயர்த்திப் பிடித்தார். தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், இப்படி கடவுள் முருகனின் வேலை தூக்குவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஸ்டாலின் வேல் கம்பை உயர்த்திப் பிடித்தது குறித்தான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதே நேரத்தில் திமுக தரப்பு, ‘தொண்டர்கள், விருப்பத்துடன் கொடுக்கும் ஒரு விஷயத்தை வாங்கிக் கொள்வதே நல்ல தலைவனுக்கு அழகு. அதைத் தான் ஸ்டாலினும் செய்தார். அதில் எந்த தவறும் இல்லை’ என்று கூறுகிறது. இந்நிலையில் ஸ்டாலின், வேல் கம்பை ஏந்தியது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘ஸ்டாலின் இப்போது வேல் கம்பை மட்டும்தான் தூக்கியுள்ளார். அடுத்து அவர் வாயில் வேலை குத்திக் கொள்வார். தொடர்ந்து தீ மிதிப்பார். தேர்தல் வந்துவிட்டது இல்லையா, இனி அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். அவரது மொத்த கவனமும் முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் தான் உள்ளது. அதைப் பிடிப்பதற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். எந்த காரியத்தில் வேண்டுமானாலும் ஈடுபடுவார்.

தனது மனைவி துர்கா அம்மையாரைக் கூட அடுத்து, இதைப் போன்ற கடவுள் நம்பிக்கையுடைய சடங்குகளில் ஈடுபடச் சொல்வார். தேர்தலுக்காக தற்போது கடவுள் நம்பிக்கை இருப்பவர் போல நாடகமாடுகிறார் ஸ்டாலின். தேர்தல் முடிந்தவுடன் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வார். இதை தமிழக மக்கள் நம்புவார்களா? என்றைக்கும் நம்ப மாட்டார்கள். தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாக பேசினார் செல்லூர் ராஜூ.

முன்னதாக ஸ்டாலின், ‘நான் செல்லும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் அதிமுகவுக்கு எதிரான அலை அதிகமாக வீசுகிறது. மக்கள் அதிமுக மீதும், அதிமுக அரசு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்களின் தொகுதிகளில் தான் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. அமைச்சர்கள் மீது தான் மக்கள் அதிக அதிருப்தியில் இருக்கின்றனர்’ என்றார். இது குறித்து செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பிய போது,

‘திமுக கூட்டும் கூட்டத்துக்கு வருபவர்களை வைத்துக் கொண்டு இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள். 500 அல்லது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூடத்தான் மக்கள் கூட்டம் வரும். அவரது கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்றார் உஷ்ணமாக.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version