தமிழ்நாடு

மஹாமெகா ஊழலில் ஈடுபட்டுள்ள வீரதீர மிக்க அமைச்சர் வேலுமணி: மு.க.ஸ்டாலின் சாடல்!

Published

on

குட்கா ஊழலை அடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இதனை அம்பலப்படுத்தியது. இதனையடுத்து அந்த ஊடகத்திற்கு எதிராக அமைச்சர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையின் மூலம் அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும் தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையைக் கொள்ளையாட்சித் துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

அமைச்சரின் எட்டு பினாமி நிறுவனங்கள், அமைச்சரின் துறைகளில் முழு ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன. வேலுமணி அமைச்சரான பிறகு, இந்நிறுவனங்களின் பிசினஸ் உயர்ந்துள்ளது. அமைச்சர் வேலுமணி ஊழல் திருவிளையாடல்கள் அரங்கேற்றி அதிமுக அமைச்சரவையில் மற்றவர்களையெல்லாம் தோற்கடித்து, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

942 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் டெண்டர்களால் சூறையாடப்பட்டு, இன்றைக்கு 2,500 கோடி ரூபாய் கடனில் மாநகராட்சி மூழ்கியிருக்கிறது. இதுவரை வரலாறு கண்டிராத “மஹாமெகா” ஊழலில் ஈடுபட்டுள்ள “வீரதீர மிக்க” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்தப் பதவியில் நீடிப்பதற்கு, தார்மீக ரீதியாகச் சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் நியாயமான நேர்மையான சட்டத்துக்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version