தமிழ்நாடு

இனிமேல் முழுநேர அரசியல்: உதயநிதிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வரும் வேளையில் அவரை சினிமாவுக்கு பை சொல்லிவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட ஸ்டாலின் உத்தரவிட்டதாக ஒரு தகவல் உலா வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றது. பாஜக, அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் இரண்டிலும் திமுக அதிக இடங்களை கைப்பற்றியதால் தற்போது திமுகவில் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் தனது மகன் உதயநிதிக்கு பதவி வழங்க ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனையடுத்து உதயநிதிக்கு ஸ்டாலின் முன்னதாக வகித்த இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவு நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திமுகவினர் உதய்நிதிக்கு பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் உதயநிதிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு உத்தரவு போட்டதாக ஒரு தகவல் உலா வருகிறது.

அதில், முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் சினிமாவில் முழு கவனம் செலுத்தாமல் அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி மக்களோடு அதிக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அரசியலில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக களமிறங்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version