தமிழ்நாடு

“இராயபுரத்தில ஜெயிக்க நான் எதுக்கு; உங்கள ஓடவிட திமுக தொண்டன் போதும்!”- ஜெயக்குமாருக்கு ஸ்டாலினின் பதிலடி

Published

on

தன் சொந்த தொகுதியான இராயபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் சவால் விட்டிருந்தார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். அதற்கு ஸ்டாலின், தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று பலரும் சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அந்த இடத்தில் தான் நான் போட்டியிடுவேன். சரிக்குச் சமமாக நின்று ஜெயித்துக் காட்டுவேன்’ என்று அதிரடி சவால் விட்டிருந்தார். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மீன் வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமாரும், மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுத்த்திருந்தார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘இதுவரை நான் என் தொகுதியான இராயபுரத்தில் இருந்து 5 முறை சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். வரும் தேர்தலிலும் இங்கு தான் நான் போட்டியிடுவேன். வெற்றி காண்பேன். திமுகவின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு நான் நேரடி சவால் விடுகிறேன். என் தொகுதியில் வந்து போட்டியிட்டு நீங்கள் ஜெயித்துக் காட்டுங்கள் பார்ப்போம்.

நீங்கள் தான் ஆட்சியமைக்கப் போகிறீர்கள் என்று பேசி வருகிறீர்கள் அல்லவா? இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். ஸ்டாலின் முதலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் நின்றார். பின்னர் கொளத்தூர் தொகுதியில் நின்றார். இந்த முறை கொளத்தூரில் போட்டியிடுவாரா அல்லது திருவாரூர் ஓடுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், நான் அப்படி இல்லை. ஒரே தொகுதியில் தான் போட்டியிடுவேன்.

ஸ்டாலினுக்கு மட்டுமல்ல மொத்த திமுகவுக்கும் சவால் விடுகிறேன். உங்களுக்குத் திராணி, திறமை, தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து இராயபுரத்தில் போட்டியிடுங்கள் பார்ப்போம்’ என்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருவொற்றியூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘கொளத்தூரில் கோரிக்கை மனுக்களை மக்கிடம் இருந்து வாங்கி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இப்படி ஒரு அமைச்சர் சொல்கிறார். கொளத்தூருக்கு வந்து பாருங்கள் தெரியும். நேரில் வந்து ஆய்வு செய்ய நீங்கள் தயாரா?

அப்புறம் அந்த அமைச்சர், இராயபுரத்தில் நான் அவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் எனச் சொல்கிறார். உங்களைத் தோற்கடிக்க நான் எதற்கு? சாதாரண திமுக தொண்டனை நிறுத்தி உங்களை வீழ்த்துவேன். பார்த்து விடுவோமா? இப்படி சொல்வதற்கு காரணம் நாங்கள் இல்லை. மக்கள் தயாராகி விட்டார்கள். உங்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ரெடியாக இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக உரையாற்றியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version