தமிழ்நாடு

எடப்பாடி இல்ல, யார் வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது…!- சவால்விட்ட மு.க.ஸ்டாலின்

Published

on

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலினும் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்தக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் உஷ்ணமடைந்த ஸ்டாலின், தமிழக அரசுக்கு சவால் விட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிராமசபை என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு. அந்தப் பெயரில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடாது” என்ற செய்திக் குறிப்பின் கூற்று ஏன் “முதலமைச்சர்” பதவிக்கும் “அமைச்சர்” பதவிக்கும் பொருந்தாது? ஏனென்றால், இந்த இரண்டு பதவிகளுமே அரசியல் சட்டத்தில் உள்ளவைதான். இந்த செய்திக்குறிப்பின்படி பழனிசாமியும்- மற்ற சகாக்களும் “முதலமைச்சர்” என்ற பெயரையும் – “அமைச்சர்” என்ற பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று செய்தித்துறை ஒரு பத்திரிக்கை குறிப்பை வெளியிட வேண்டியதுதானே. இந்தப் பெயர்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே? ஆகவே அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் இரு தினங்களில் சுனாமி போல் கிளம்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சர் பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி – அராஜக மனப்பான்மையுடன் தி.மு.க. “கிராமசபை” கூட்டத்தைத் தடுக்க முயன்றுள்ளார். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிராமசபைக் கூட்டத்தை எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசால் தடுத்து விட முடியாது. பிரச்சாரத்தையும் “வழக்குகளை”க் காட்டி முடக்கி விட முடியாது. அதே நேரத்தில் –“அமைதியான தேர்தலுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில்- திராவிட முன்னேற்றக் கழகத்தின் “கிராம சபை” கூட்டங்கள் இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1700 நிர்வாகிகள் – 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி – மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version