தமிழ்நாடு

தீர்ப்பில் பிழை: நீதிபதியை நோக்கி வைகோ சரமாரி கேள்வி!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் ஒரு வரியில் பிழை இருந்ததால் நீதிமன்றத்தி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கி கருணை காட்டுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கேட்டுக் கொண்டதாக தீர்ப்பின் நகலில் கூறப்பட்டுள்ளது. இதற்கு வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனடியாக நீதிபதி சாந்தியை நோக்கி, நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே, வாதாடவில்லையே, ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே? இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என கடுமையாக கூறினார் வைகோ.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நீதிபதி அதிர்ச்சியாகிவிட்டார். இதனையடுத்து உடனடியாக ஆவனங்களை எடுத்துப்பார்த்த நீதிபதி தீர்ப்பை திருத்தி விடுகிறேன் என கூறி சர்ச்சைக்குரிய வாசகங்களை தன் கைப்பட அடித்து அதில் தன் கையெழுத்தையும் இட்டு நீதிமன்றப் பணியாளர்களிடம் கொடுத்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

seithichurul

Trending

Exit mobile version