தமிழ்நாடு

மற்றவர்களுக்கு முன்னுதாரணம்… சர்ச்சையான ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

Published

on

இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ ஆகிய மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன.

இதில் கோவிஷீல்டு மருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. கிட்டதட்ட ஓராண்டாக மூன்று கட்ட கொரோனா பரிசோதனைகளுக்கு அந்த தடுப்பு மருந்து உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான் இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியது.

அதே நேரத்தில் கோவாக்ஸின் மருந்துக்கு மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியவில்லை என்றும், அதனால் அது முழுவதுமாக பாதுகாப்பானது என்று அருதியிட்டுக் கூற முடியாது என்றும் பல தரப்பினர் தெரிவித்தனர். நாட்டின் எதிர்க்கட்சிகள், ‘முறையான சோதனைகளை முடிக்காமல், இப்படி தடுப்பு மருந்தை மக்கள் மீது செலுத்துவது அவர்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்’ என்று கடுமையாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.

ஆனால் அதற்கு மத்திய அரசு, ‘இரண்டு தடுப்பு மருந்துகளும் முழு பாதுகாப்புடையவை. இரண்டும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான், பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன’ என்று திட்டவட்டமாக விளக்கம் அளித்தது.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவை, மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என்று முக்கியப் புள்ளிகள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன் வரவில்லை. இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அரசுத் தரப்பு, ‘முன் கள பணியாளர்களுக்குத் தான் தடுப்பூசி முதலில் போடப்பட வேண்டும்’ என்று கூறியது. இருப்பினும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

 

seithichurul

Trending

Exit mobile version