தமிழ்நாடு

நாக்கை அறுப்பேன் போய் இப்ப நாக்கு அழுகிவிடும்: அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்!

Published

on

அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என அதிமுக சார்பில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் ஆவேசமாக. நாக்கை அறுத்துவிடுவோம் என அமைச்சர் ஒருவரே வன்முறையை தூண்டும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைக்கண்ணு, தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அரசை தவறாகப் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கிராமத்துப் பாணியில் சொல்வதற்குப் பதில், தவறுதலாக இதுபோன்ற வார்த்தை வந்துவிட்டது.

அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டுமென்றோ அல்லது யாரையும் குறிப்பிட்டோ இதனை நான் சொல்லவில்லை. தவறுதலாக வந்த அந்த வார்த்தைக்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என விளக்கம் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version