தமிழ்நாடு

எச்.ராஜா குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் வணக்கம் போட்டுவிட்டு கிளம்பிய அமைச்சர் செங்கோட்டையன்!

Published

on

மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் அறிவுப்புக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்திருந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்தப் பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும்கூட ஊக்குவிப்பதாகத் தெரியவருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகளைக் கட்டக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது என்பது தனிநபர் உரிமைக்கும், இந்து மத உணர்வுக்கும் எதிரானது. நெற்றியில் திலகமிடுவதும் கையில் கயிறு கட்டுவதும் இந்துக்களின் பழக்க வழக்கம். இதில் சாதி எங்கிருந்து வந்தது. இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால் மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த பள்ளிகள் இது போன்ற மத அடையாளங்களை அணிந்து வருகிறார்கள் என்பது தெரிந்தால் கூறுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். மேலும் அந்த சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட துறை தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றார். தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சொல்லிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோது எதுவும் பேசாமல் வணக்கம் போட்டுவிட்டு நகர்ந்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

seithichurul

Trending

Exit mobile version