தமிழ்நாடு

நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்: பாஜகவை தொடர்ந்து அதிமுக அமைச்சர் பாய்ச்சல்!

Published

on

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அகரம் அறக்கட்டளையின் 40-ஆம் ஆண்டு விழாவில் பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசையும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டுவந்து, இந்தி கட்டாயமல்ல, அவரவர் விருப்பம் போல படிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நீட்டுக்கு எதிராகவும், அனைவருக்கும் சமமில்லாமல் உள்ள கல்விமுறைக்கு எதிராகவும் சூர்யா பேசியது பலரை ஈர்த்தது. புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன என சூரியா கூறியதையடுத்து பலரும் அதுபற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளது. ஆனால் அரசியலில் சூர்யாவின் விமர்சனம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சூர்யாவை பாஜகவை சேர்ந்த தமிழிசை மற்றும் எச்.ராஜா ஆகியோர் விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவும் விமர்சித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

Trending

Exit mobile version