தமிழ்நாடு

தேமுதிகவை திமுக அவமானப்படுத்தியது அரசியல் நாகரிகமல்ல: ஜெயக்குமார் அதிரடி!

Published

on

மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழும், திமுக தலைமையின் கீழும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. இதனால் தேமுதிக தனித்துப்போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக தேமுதிக திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கூட்டணி உடன்படவில்லை. இதனையடுத்து திமுக தரப்பு மற்ற கூட்டணி கட்சிகளுக்கு சீட்களை பகிர்ந்து அளித்தது. இந்நிலையில் தேமுதிக அதிமுக உடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதனையடுத்து நேற்று திடீரென அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதி என தகவல்கள் வெளியானது.

ஆனால் கூட்டணி முடிவாகவில்லை. இதனையடுத்து தேமுதிக திமுக பக்கம் செல்ல முடிவெடுத்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திமுகவில் தேமுதிகவுக்கு கொடுக்க தொகுதிகள் இல்லை என்பதால் அங்கு கூட்டணி கதவு அடைக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக மாறி மாறி திமுக, அதிமுக உடன் கூட்டணி குறித்து பேசி வருவதை துரைமுருகன் ஊடகங்கள் முன்னிலையில் போட்டுடைத்தார்.

தேமுதிக இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. இது ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் இந்த செயலை கடுமையாக சாடினார்.

அரசியலில் ஒரு கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதை பொதுவெளியில் சொல்வது நாகரீகமல்ல. தேமுதிகவை கேவலப்படுத்துகிற வகையில், அவமானப்படுத்துகிற வகையில் திமுக நடந்துகொண்டது என குற்றம் சாட்டினார் ஜெயக்குமார். மேலும் தேமுதிகவுக்கு அதிமுகவின் கூட்டணி கதவுகள் மூடப்படவில்லை. தேமுதிக வரட்டும், பேச்சுவார்த்தை நடத்தட்டும், நல்ல முடிவு எட்டப்படும் என்றார்.

மேலும் அதிமுக என்னும் போயிங் விமானம் டெல்லி செல்ல தயாராக உள்ளது, தேமுதிக போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு வந்தால் டெல்லி செல்லலாம். எங்களுடைய கூட்டணி கதவை நாங்கள் மூடவில்லை, இனி முடிவு செய்யவேண்டியது தேமுதிகதான் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

Trending

Exit mobile version