தமிழ்நாடு

திமுகவில் ஆட்களுக்கு பஞ்சம்; திமுக ஆக்குபை அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Published

on

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அமமுகவில் மிக முக்கிய தலைவராக வலம் வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அதிரடி அரசியலுக்கு பெயர்போன தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். ஆனால் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அவர் அமமுகவிலிருந்து விலகினார்.

இதனையடுத்து அவர் அதிமுகவுக்கு செல்வார் என பேசப்பட்டு வந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து தேனியில் ஸ்டாலின் தலைமையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைத்தார்.

இந்நிலையில் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் வகித்த அதே பதவியை திமுகவில் தற்போது அவருக்கு அளித்துள்ளனர். ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில் மூன்றாவது நபராக தங்க தமிழ்ச்செல்வனும் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திமுகவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. திமுகவில் பல கசப்புகள் உள்ளது இதன் மூலம் தெரிகிறது. அந்த கட்சிக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்கள் பலர் இருக்கின்ற நிலையில் நேற்று வந்தவருக்கு முக்கிய பதவி கொடுத்திருப்பது அங்கு ஏதோ மனக்கசப்பு உள்ளதையே காட்டுகிறது.

பாகிஸ்தான் ஆக்குபை காஷ்மீர் என்பதை போல திமுக ஆக்குபை அதிமுக என்ற நிலைதான் உள்ளது. எங்கள் கட்சியில் இருந்து வந்தவருக்கு முக்கிய பதவி தரும் அளவிற்கு திமுகவில் ஆட்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார். தங்க தமிழ்ச்செல்வன் முன்பு தீவிர அதிமுக காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version