தமிழ்நாடு

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பது எப்போது? மற்றும் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தார்..

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

பள்ளிகள் திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் அதன்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகள் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் பள்ளிகள் தூய்மை படுத்தப்பட்டு வருகிறது என்பதும் பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version