இந்தியா

கோவை – மதுரை இடையே மினி வந்தே பாரத் ரயில்.. ஆச்சரியமான தகவல்!

Published

on

இந்தியாவில் தற்போது 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் இன்னும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் ஒரு பக்கம் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மினி வந்தே பாரத இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. வெறும் 8 பெட்டிக்களுடன் குறுகிய தூரத்தில் ஓடும் இந்த மினி வந்தே பாரத் ரயில்கள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த அளவிலான பயண தூரம், குறைந்த நேரம் கொண்ட மினி வந்தே பாரத் ரயில்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் 8 பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மினி வந்தே பாரத் ரயில்கள் அமிர்தசரஸ்-ஜம்மு, கான்பூர்-ஜான்சி, ஜலந்தர்-லூதியானா, கோயம்புத்தூர்-மதுரை, மற்றும் நாக்பூர்-புனே ஆகிய பகுதிகளில் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் வசதியை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 200 கிலோமீட்டர் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது இயங்கி வரும் 8 வந்தே பாரத் ரயில்களின் வழித்தடங்கள் இதோ:

செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
ஹவுரா – நியூ ஜல்பைகுரி
புது தில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா
பிலாஸ்பூர் – நாக்பூர்
மும்பை மத்திய – காந்திநகர்
மைசூர் – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
அம்ப் ஆண்டௌரா – புது தில்லி
வாரணாசி – புது தில்லி

Trending

Exit mobile version