உலகம்

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து விபத்தான 100க்கும் மேற்பட்ட வாகனங்கள்; அமெரிக்காவில் கோர சம்பவம்!

Published

on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி அதிர்ச்சியளிக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோர்ட் வொர்த்தில் உள்ள 35W என்னும் பகுதியில் இருக்கும் சாலையில் இந்தக் கோரமான விபத்து நடந்துள்ளது.

நேற்று காலை 6 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 133 வாகனங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், 6 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்றும் அதிர்ச்சிகர தகவல் வந்துள்ளது. இதுவரை 36 பேர் தீவிர சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

சாலையிலிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தவும், மக்களை மீட்கவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. குளிர் காலம் என்பதனால் சாலை வழக்கும் தன்மையில் இருந்திருக்கக்கூடும் என்றும், அதுவே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. உள்ளூர் போலீஸ் தரப்பு இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறது.

அமெரிக்காவின் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், போலீஸ், பொது மக்கள் என அனைத்துத் தரப்பும் இணைந்து, வாகன நெரிசல்களில் சிக்கித் தவித்து வருபவர்களை தொடர்ந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், அடுத்ததாக இந்த விபத்து ஏற்பட்டு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version