ஆட்டோமொபைல்

மாருதி சுசூகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் விதித்த இந்தியப் போட்டியியல் ஆணையம்… என்ன காரணம்?

Published

on

டீலர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது என்ற காரணத்துக்காக, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ).

மாருதி டீலர்கள் குறைந்த அளவில் மட்டும் தான் தள்ளுபடி வழங்க வேண்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்தியப் போட்டியியல் ஆணையத்துக்கு 2019-ம் ஆண்டு பல புகார்கள் வந்துள்ளன.

அதைத் தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனத்தைக் கண்காணித்த இந்தியப் போட்டியியல் ஆணையம், மாருதி சுசூகி டீலர்கள் வாகனங்களுக்குத் தள்ளுபடி வழங்க அனுமதிக்கப்படாததால் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் மற்றும் பரிசுகள் போன்ற நன்மைகள் கிடைக்கவில்லை.

ஒருவேலை டீலர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும். அனுமதிகள் ஏதுமில்லாமல் தள்ளுபடி, சலுகைகள் போன்றவை வழங்கப்பட்டால் அந்த டீலர்கள் மீது அபராதம் விதிப்பது, அவர்கள் உரிமைகளை ரத்து செய்வது, வாகன ஆர்டர்களை தாமதமாகச் செயல்படுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மாருதி எடுத்துள்ளது.

தங்கள் அனுமதி இல்லாமல் டீலர்கள் தள்ளுபடி, பரிசு, சலுகைகள் வழங்குகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே ரகசிய தனிக்கை குழு ஒன்றையும் மாருதி நிறுவியுள்ளது. இவை இந்தியப் போட்டியியல் ஆணையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் உறுதியும் ஆகியுள்ளது.

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கி இருந்தால் நுகர்வோர் பெரும் அளவில் பயன்பெற்று இருப்பார்கள். ஆனால் நுகர்வோருக்கு எதிரான நடவடிக்கையில் மாருதி ஈடுபட்டுள்ளது. இது இந்திய போட்டியியல் துறை சட்டப் பிரிவு 3(4)(e), பிரிவு 3(1) கீழ் குற்றம். எனவே மாருதி சுசூகி நிறுவனம் மீது 200 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக இந்தியப் போட்டியியல் ஆணையம் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியப் போட்டியியல் ஆணையத்தின் நோட்டீஸ் தங்களுக்கு வந்துள்ளதை உறுதி செய்த மாருதி சுசூகி நிறுவனம், அதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். மாருதி சுசூகி நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலன் சார்ந்துதான் செயல்பட்டு வருகிறது, தொடர்ந்து செயல்படும் என அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விற்கப்படும் 2 கார்களில் ஒன்று மாருதி கார் என்பது கூடுதல் தகவல்.

Trending

Exit mobile version