விமர்சனம்

முற்போக்கு போர்வை போர்த்தி வந்திருக்கும் தேர்தல் ஆணைய ஏஜெண்ட் – மண்டேலா விமர்சனம்!

Published

on

செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சம ஓட்டுகள் இருக்கும் நிலையில் அங்கே இருக்கும் ஊர்ப்பெரியவர் (சங்கிலி முருகன்), மற்றும் முடித்திருத்தும் தொழிலாளி ஸ்மைல் @ நெல்சன் மண்டேலா (யோகி பாபு) ஆகியோரின் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிப்பவை. இதில் பெரியவர் வாக்களிக்க வரமாட்டார் என்ற நிலையில் ஸ்மைலியின் வாக்கு மட்டுமே வெற்றி உறுதி செய்கிறது. இருவரில் அவர் யாருக்கு வாக்களித்தார்? ஸ்மைலி யார்? இறுதியில் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாக ஆங்காங்கே தேவையான அளவு முற்போக்கு கருத்துகளை இட்டு நிறப்பி சொல்லியிருக்கும் படம் தான் மண்டேலா…

ஸ்மைல் @ மண்டேலாவாக யோகி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னை மதிக்காமல் புறவாசல் வழியாக வரச்சொல்லும் போதும், தனக்கு இருக்கும் மதிப்பு தெரிந்து அதைப் பயன்படுத்திக்கொள்ளும் இடத்தில் ஆள் மிளிர்கிறார். பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு நல்ல கேரக்டர் ரோல் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பெரிய அய்யா என்னும் ‘கருணாகரன் பெரியாராக’ சங்கிலி முருகன். ஸ்மைலை ஊரையே உற்றுநோக்க வைக்கும் நெல்சன் மண்டேலாவாக மாற்றும் நபராக ஷீலா ராஜ்குமார். `கிருதா’வாக முகேஷ், பெரிய அய்யாவின் மூத்த மகனாக GM சுந்தர், இளைய மகனாக கண்ணா ரவி, வேண்டாம் மட்டுமே சொல்லும் கல்கி, செருப்பு சர்ச்சை செய்யும் குமாரமூர்த்தி என படத்தில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் நம் மனதில் நிற்கிறார்கள்.

இப்போவெல்லாம் யாருப்பா சாதி பாக்குறாங்க என்ற வசனமும் ஒன்லி பார் வெஜிடேரின் என்ற டூலெட் போர்டும் இப்போதும் வளர்ந்த நகரங்களிலேயே காணப்படும் போது திருநெல்வேலியின் கடைக்கோடி கிராமத்தில் அது எவ்வளவு தீவிரமாக சொல்ல வேண்டுமோ அவ்வளவு தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். கிடைக்கும் இடத்தில் எல்லாம் சாதி மேலாதிக்க மனநிலையை, சமூக அவலத்தை அடித்து நொறுக்குச் செல்கிறார் இயக்குநர் அஷ்வின். எல்லா நேரத்திலும் பார்க்கப்படும் சாதி தேர்தல் நேரத்தில் காணாமல் போகிறது என்ற செய்தியுடன் தேர்தல் நேரத்தில் வெளியாகி இருக்கிறது மண்டேலா. அதுவும் பாராட்டுக்கு உரிய விசயம் தான். காமெடி காட்சிகள், சோகக் காட்சிகள் என இரண்டுக்குமான தனித்துமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் பரத் ஷங்கர். யுகபாரதி, அறிவு ஆகியோரின் பாடல்களின் வரிகளும் படத்தில் அரசியல் பேசுகின்றன.

நல்ல படம் தான். ஆனால், முற்போக்கு போர்வைக்குள் ஒழிந்துகொண்ட எல்லாவற்றிற்கும் தேர்தல் ஜனநாயகம் தான் தீர்வு, ஓட்டுக்காக வாங்கும் இலவசங்கள் மோசமானவை என்று தமிழகத்தின் திராவிட அரசுகள் செய்த பல நன்மைகளை கவுத்துவிட்டுச் செல்கிறார் இயக்குநர் அஷ்வின். சர்கார் போன்று இந்தப் படமும் தேர்தல் கமிஷனின் ஏஜெண்டாகவே செயல்படுகிறது ஒரு கட்டத்திற்கு மேல். யோகி பாபுவுக்கு வாக்கு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவருக்கு கிடைக்கும் மரியாதையும் அவர் அந்த மரியாதை வைத்துச் செய்யும் சில செயல்களும் பார்வையாளருடன் ஒட்டாமல் அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த முற்போக்கு போர்வைக்குள் நுழைந்து திராவிடத்திற்கு எதிரான கருத்துகளுடன் இயக்குநர் நுழைவார்களோ தெரியவில்லை. ஆகா, படம் நல்லா இருக்கே. ஆனால், என்று யோசிக்கும் போது இந்தப் படம் ஏற்படுத்தும் அசைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற உண்மை நமக்கு தெரிய வருகிறது. முருகதாஸ், சங்கர்களிடம் இல்லை, இந்த முற்போக்கு போர்வை போர்த்திய புலிகளிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்…

Trending

Exit mobile version