இந்தியா

வெற்றி பெறுவதில் சிக்கல்; நந்திகிராம் அல்லாமல் வேறு தொகுதியில் மம்தா போட்டியா?

Published

on

மேற்கு வங்கத்தில் தற்போது 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மீதமுள்ள தேர்தல் வாக்குப் பதிவு நடக்க உள்ளது. அங்கு பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸுக்கும் இடையில் மட்டும் தான் போட்டி நிலவும் என்று சொல்லப்படுகிறது. மம்தா, இதுவரை மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் மட்டும் போட்டியிட்ட நிலையில், இன்னொரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் நந்திகிராம் தொகுதியும் தேர்தலை சந்தித்தது. இங்கு மம்தாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இவர், அந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால், இத்தேர்தலானது மம்தா பானர்ஜிக்கு மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘நந்திகிராம் தொகுதியில் தான் தோல்வி அடைவது உறுதி என்பது மம்தாவுக்கு தெரிந்துவிட்டது. அதனால், இறுதிக்கட்ட தேர்தலில்வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்பதை மம்தா தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கூச்பிஹாரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது, ‘நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன். ஆதலால், வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ தேவையில்லை’ என்றுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version